தீவு பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு இடம்பெயர்ந்த புறாக்கள்


தீவு பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு இடம்பெயர்ந்த புறாக்கள்
x
தினத்தந்தி 8 April 2019 4:00 AM IST (Updated: 8 April 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

தீவு பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு கடல் புறாக்கள் இடம்பெயர்ந்துள்ளன.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ்கள் மூலமாக தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்துபோன கட்டிடங்களையும், அரிச்சல்முனை கடல் பகுதியையும் தினமும் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் புறாக்கள் வாழ்ந்து வருகின்றன. தினமும் மணல் திட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கடல் காவா என்று அழைக்கக்கூடிய கடல்புறாக்கள் கோதண்ட ராமர்கோவில் பகுதி மற்றும் அரிச்சல்முனை வரை உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் கூட்டமாக நின்றபடி இரை தேடுவதும், பறந்து செல்வதும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தீவு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பல வகையான கடல் புறாக்கள் குவிந்துள்ளன.

இதுபற்றி வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் 200 வகையான பறவைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தீவு பகுதிகளை சுற்றிலும் பல விதமான கடல் புறாக்கள் குவிந்துள்ளன. இந்த ஆண்டு தீவு பகுதிகளில் இருந்து பலவித கடல் புறாக்கள் தனுஷ்கோடி பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. வழக்கமாக தனுஷ்கோடி பகுதியில் வெள்ளைகால் கடல்புறா மட்டுமே அதிகஅளவில் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு வெள்ளை கடல்புறாவுடன், பழுப்பு தலை கடல்புறா, கருந்தலை கடல்புறா, மஞ்சள் கால் கடல்புறா போன்ற புறாக்களும் குவிந்துள்ளன. இந்த ஆண்டு தனுஷ்கோடி பகுதியில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறாக்கள் இருப்பது பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதை தவிர கள்ளப்பருந்து, நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story