ராமேசுவரம்– ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும் - பிரேமலதா பேச்சு


ராமேசுவரம்– ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும் - பிரேமலதா பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 4:15 AM IST (Updated: 8 April 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்– ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என சாயல்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறினார்.

சாயல்குடி,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாயல்குடி மும்முனை சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

நமது கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றி உறுதியாகிவிட்டது. வெற்றியினை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். ராமேசுவரம்–ஏர்வாடி வரை பசுமை வழித்தடம் அமைக்கப்படும். கடற்கரை சாலை வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். தி.மு.க. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் சேர விடாமல் செய்தவற்கு பல வழிகளை கையாண்டது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது. 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் தான் இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு தே.மு.தி.க. உறுதுணையாக நிற்கும். வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் பெறப்போவது உறுதி.

தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான் தமிழகத்தினை மின் மிகை மாநிலமாக மாற்றியது. இலங்கை படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்த தி.மு.க. வை அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் புறக்கணித்து அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story