மு.க.ஸ்டாலினின் வேஷம் மக்களிடம் எடுபடாது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
மு.க. ஸ்டாலினின் வேஷம் மக்களிடம் எடுடாது என துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரனும், வேட்பாளர் அழகர்சாமியும் வந்திருந்தனர்.பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
மத்தியில் கடந்த 5 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. இதேபோன்று தமிழகத்திலும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அதன்படி கர்ப்பிணி பெண்களூக்கான நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தாலிக்கு வழங்கப்பட்ட 4 கிராம் தங்கத்திற்கு பதில் 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
நகர்புற ஏழைகளுக்கு இலவச அடுக்குமாடி வீடுகளூம், கிராமப்புற ஏழைகளுக்கு பசுமை வீடுகளும் கட்டித்தரப்படுகின்றன. இதுவரை 6 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 2023–ம் ஆண்டிற்குள் அனைத்து ஏழை மக்களுக்கும் இலவச வீடுகள் கட்டித்தரப்படும். தமிழக அரசு ஜெயலலிதா காட்டிய வழியில் அவர் தொடங்கிய திட்டங்களையும், அறிவித்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் 10 ஆண்டுகளாக இருந்தது. தி.மு.க. சார்பில் 9 மந்திரிகள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஒரே ஒரு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை தான் கொண்டு வந்தனர். அந்த திட்டம் பலன் தராது என இயற்கை சூழல் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் ரூ.40 ஆயிரம் கோடியை சேது சமுத்திர திட்டத்திற்காக கடலில் போட்டு வீணாக்கி விட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் என் மீதும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நாங்கள் தீப்பந்தங்களுடன் அலைவதாக கூறுகிறார். ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டு 3 பேர் பலியான சம்பவம் நடந்தது. நாங்கள் யாரும் அம்மாதிரியான செயலை செய்யவில்லை.
மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலின்போது ஜோசியர் சொன்னபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் சட்டை அணிந்து கொண்டு பிரசாரத்திற்கு வந்தார். நடந்து வந்தார், ஓடிக்கொண்டு வந்தார், சைக்கிளில் வந்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது இந்த தேர்தலின் போது டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்கிறார். நீங்கள் வேண்டுமானால் டீ குடிக்கலாம். நான் டீக்கடையே நடத்தியவன். மு.க. ஸ்டாலினின் பாட்சா எங்களிடம் பலிக்காது.
நான் 1977–ம் ஆண்டு விருதுநகருக்கு வந்திருந்தேன். மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு டீக்கடையில் டோக்கன் வாங்கிக்கொண்டு டீ குடித்தேன். இரண்டு பட்டதாரி வாலிபர்கள் அந்த டீக்கடையை நடத்தினார்கள். நல்ல கூட்டம் இருந்தது. அதைபார்த்து நான் தேனியில் சென்று டீக்கடை ஆரம்பித்தேன். ஒரு வருஷத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. காரணம் பற்றி ஆய்வு செய்தபோது தண்ணீர் கலந்த பாலை உபயோகப்படுத்தியதுதான் என தெரியவந்தது. அதன்பின்னர் பால் பண்ணை வைத்து அந்த பாலை கொண்டு டீக்கடை நடத்தினேன். 400 லிட்டர் பால்வரை விற்பனையானது. இன்றுவரை அந்த டீக்கடை நடந்து வருகிறது. எதுவாக இருந்தாலும் உழைத்து தான் சம்பாதிக்க வேண்டும். அதில் தவறில்லை.
1972–ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா இந்த கழகத்தை கட்டிக்காத்தார். அவர் 100 ஆண்டு காலம் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்திருக்கும் என குறிப்பிட்டார். அவர் மறைவிற்கு பின்பும் நாங்கள் கட்சியை நடத்தி வருகிறோம். எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் நாங்கள் எப்படி கட்சியையும், ஆட்சியையும் எப்படி நடத்துகிறோம் என பார்த்து கொண்டிருப்பார் என்ற பயத்துடன் தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறோம். தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் என்றும் பாடுபடுவோம். மத்தியில் நிலையான ஆட்சி ஏற்பட வலிமையான பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் சாத்தூர் முக்குராந்தலில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, இந்த பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. மின்சாரம் தடையின்றி அ.தி.மு.க. அரசு வழங்கி கொண்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு 4,5 மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி வேலையில்லாமல் செய்தது. மு.க. ஸ்டாலின் எவ்வளவே வேஷம் போட்டு பார்க்கிறார். வாக்கிங் போகிறார், டீக் கடையை பார்த்தால் டீ குடிக்கிறார். அவரின் வேஷம் மக்களிடம் எடுபடாது. கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர் டி.டி.வி. தினகரன். அதனால் தான் ஜெயலலிதா 10 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கி வைத்திருந்தார். துரோகம் செய்த அவருடன் சென்று விட்டார் இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சுப்பிரமணியன். அதனால் தான் இடைத்தேர்தல் வந்தது. துரோகி என ஜெயலலிதா ஒதுக்கி வைத்தவருடன் சேர்ந்து வாக்கு கேட்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.