‘கை’ சின்னத்துக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள் - வைத்திலிங்கம் வேண்டுகோள்


‘கை’ சின்னத்துக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள் - வைத்திலிங்கம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்துக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கான முட்டுக்கட்டைகளை நீக்குங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.

வில்லியனூர்,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று அமைச்சர் கந்தசாமியுடன் சேர்ந்து ஏம்பலம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். ஏம்பலம் முத்தாலம்மன் கோவில் முன்பு இருந்து தொடங்கிய இந்த தீவிர பிரசார பயணத்தில் கானாத்தோப்பு, நத்தமேடு, புதுக்குளம், செம்பியம்பாளையம், கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பு பகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தில் பேசியதாவது:-

மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற பா.ஜனதா ஆட்சியில் எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை. ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என்று உங்களால் (மக்களால்) சொல்ல முடியாது. பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து அனைத்து தரப்பினரையும் கஷ்டப்படுத்தினர்.

அவர்கள் சிறுக சிறுக வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்து பெரும் பண முதலாளிகளுக்கு கடனாக கொடுத்தனர். அந்த கடனை பெரும் பண முதலாளிகள் திரும்ப செலுத்தாமல் அவர்களை நாட்டைவிட்டே ஓடச் செய்ததுதான் பா.ஜனதா ஆட்சியின் சாதனையாக உள்ளது.

மேலும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் அந்த பணத்தை டெபாசிட் செய்வேன் என்று மோடி சொன்னார். ஆனால் இதுவரை வங்கிக் கணக்கில் பணம் போடவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டு தோறும் சென்டாக் அனுமதி மூலம் சுமார் 750 பேர் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்து படித்து பயன்பெற்று வந்தனர். ஆனால் மோடி ஆட்சியின்போது அந்த உயர்கல்விக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது மாநில மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை பறித்தனர். அந்த இடங்களை வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கினர்.

மேலும் புதுச்சேரி கவர்னர் மோடியின் ஏஜெண்டாக செயல்பட்டு நமது மாநிலத்தில் எந்த ஒரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டைபோட்டார். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணும் நேரம் தற்போது வந்துள்ளது.

வருகிற 18-ந் தேதி வாக்காளர்கள் அனைவரும் சென்று கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி நமக்கு நலத்திட்டங்களை பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கிவிடலாம். மக்கள் நலத்திட்டங்களின் பலனை நாம் பெற முடியும்.

இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.

Next Story