8 வழி சாலைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு: விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கலசபாக்கத்தில் அளவு கற்களை பிடுங்கி எறிந்தனர்


8 வழி சாலைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு: விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கலசபாக்கத்தில் அளவு கற்களை பிடுங்கி எறிந்தனர்
x
தினத்தந்தி 9 April 2019 5:00 AM IST (Updated: 9 April 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

8 வழி சாலைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். கலசபாக்கத்தில் நிலத்தில் நடப்பட்டிருந்த அளவு கற்களை பிடுங்கி எறிந்தனர்.

திருவண்ணாமலை,

சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல 8 வழி சாலை 277 கிலோ மீட்டர் தூரம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைய இருந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அளவு கற்கள் நடப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், போளூர், செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அளவு கற்கள் நடப்பட்டன. இதற்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

ஐகோர்ட்டு 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. ஆனால் கோர்ட்டு விதித்த தடையை மீறி 8 வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் உள்ள மரங்களையும், கிணறு உள்ளிட்டவைகளை அத்துமீறி அரசு அதிகாரிகள் அளவீடு செய்ததாக விவசாயிகள் புகார் செய்து வந்தனர்.

மேலும் 8 வழி சாலை குறித்து கருத்து கேட்பு கூட்டம் அவ்வப்போது செங்கம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 8 வழி சாலை திட்டத்திற்கு தங்களது விளை நிலங்களை தர முடியாது என்றும் திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தர்மபுரி மாவட்டத்தில் இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை அரூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டு இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள நினைவு தூண் அருகில் திருவண்ணாமலை மாவட்ட 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பின்னர் திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் அபிராமன் கூறுகையில், ‘சென்னை ஐகோர்ட்டு 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று 8 வழி சாலை திட்டத்திற்கு மேல் முறையீடு செய்யாமல் திட்டத்தை கைவிட வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டால் கடுமையான போராட்டங்களை 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து செய்வார்கள்’ என்றார்.

கலசபாக்கம் அருகே உள்ள நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, பொன்னாதாங்கல், வடபுழுதியூர், முத்திரசம்பூண்டி, சிறுகிளாம்பாடி, கோடிகுப்பம், தென்னகரம், மேப்பத்துரை உள்பட பல்வேறு கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த தீர்ப்பை வரவேற்று ஒருவருக்கு ஒருவர் நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் தங்கள் நிலத்தில் 8 வழி சாலைக்காக நடப்பட்ட அளவு கற்களை பிடுங்கி எறிந்தனர்.

செங்கத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த முறையாறு கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் தலைமையில், மண்மலை மெயின் ரோட்டில் விவசாயிகள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மேலும் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தமிழக அரசு 8 வழி சாலைக்கு மேல்முறையீடு செய்யக்கூடாது. அந்த திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி கைவிட வேண்டும்’ என்றனர்.

செய்யாறு பஸ் நிலையம் முன்பாக விவசாயி தேவன் தலைமையில், எருமைவெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் திரண்டனர். பின்னர் அவர்கள், சென்னை - சேலம் 8 வழி சாலை அமைப்பதற்கு விவசாய நிலம் கையகப்படுத்தியது செல்லாது எனவும், 8 வழி சாலை அமைக்க தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதுகுறித்து விவசாயி தேவன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்தினோம். 8 வழிச்சாலை அமைக்க எங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலம் பறிபோகிறதே என நினைத்து தூக்கமின்றி தவித்து வந்தோம். எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பு அளித்த நீதிபதிகளுக்கும், வாதாடிய வக்கீல்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. அரசு மேல்முறையீட்டுக்கு சென்றால் கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தடுத்திட வேண்டும்’ என்றார்.

Next Story