மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பது தான் எதிர்க்கட்சிகளின் கடமை - அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு


மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பது தான் எதிர்க்கட்சிகளின் கடமை - அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 4:45 AM IST (Updated: 9 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

காரைக்கால்,

காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காரைக்கால் பிராந்திய பக்கிரிசாமி பிள்ளை, பரூக் மரைக்காயர், ராமசாமி, சண்முகம் ஆகிய 4 முதல்-அமைச்சர்களை புதுச்சேரிக்கு தந்துள்ளது. ஆனாலும் இந்த பகுதி முன்னேற்றம் அடையவில்லை. புதுவையில் 3 ஆண்டுகளாக நடைபெறும் காங்கிரஸ் அரசு செயலற்றதாக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்கு துணையாக இருப்பதுதான் முதல்-அமைச்சரின் கடமை.

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுடன் மோதல்போக்கினை கடைபிடித்தது கிடையாது. ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசு, கவர்னர் மற்றும் பக்கத்து மாநிலமான தமிழகத்துடன் அரசியல் ரீதியாக மோதல் போக்கினை கொண்டுள்ளார். புதுச்சேரியில் எந்த இயற்கை வளமும் இல்லாததால் தண்ணீர், மணல், ஜல்லி என எதுவாக இருந்தாலும் பக்கத்து மாநிலத்தை சார்ந்துதான் உள்ளோம். காரைக்கால் எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படாமல் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது.

விபத்தால் பாதிக்கப்படும் மக்கள் குணமடைவதற்கு தேவையான மருத்துவமனை கூட சரியாக இல்லை. கல்வியிலும் காரைக்கால் மாவட்டம் மேம்படுத்தப்படவில்லை. புயலால் நிவாரணத்தை கூட மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டு பெற முடியவில்லை.

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் காரைக்காலில் வளர்ச்சி ஏற்பட தனி மாவட்டமாக பிரித்து அறிவித்தார். நாராயணசாமி பதவியேற்றது முதல் தற்போது வரை 11 முழு அடைப்பு போராட்டங்கள் நடந்துள்ளது. புதுச்சேரிக்கு தொடர்பு இல்லாத பிரச்சினைகளுக்குகூட புதுவையில் முழுஅடைப்பு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story