வருடந்தோறும் ரூ.72 ஆயிரம் நிதிஉதவி குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் கார்த்தி சிதம்பரம் பேச்சு
வருடந்தோறும் ரூ.72 ஆயிரம் நிதி உதவி குடும்பத் தலைவியின் பெயரில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் சாக்கோட்டை ஒன்றியத்தில் சிறுகவயல், சித்தி வயல், நென்மேனி, மாத்தூர், இலுப்பக்குடி, அரியக்குடி, காதிநகர், அமராவதிபுதூர் ஆகிய பகுதிகளில் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் ஏராளமானோர் பயனடைந்தனர். அதன்பின்பு வந்த அரசு அந்த திட்டத்தை முடக்கியது. மீண்டும் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்கும் போது 100 நாள் வேலை திட்டம் தொடரும். மேலும் அந்த திட்டம் 150 நாட்களாக விரிவுபடுத்தப்படும்.
காங்கிரஸ் அரசு வழங்கிய கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது, அவை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
நியாயம் திட்டம் என்ற பெயரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் வருடம் ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். மேலும் இதற்கான கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டு அவை சரி பார்க்கப்பட்டு அதன் பின்பு வழங்கப்படும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவற்றால் தொழில்துறைகள் முடங்கிப்போயின. வேலைவாய்ப்புகள் பறிபோனது. விலைவாசி உயர்ந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட உடன் இந்த குறைகள் நீக்கப்பட்டு மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வு குறித்த முடிவை மாநில அரசே எடுத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் நல் வழி காட்டியுள்ளது என்பதை மனதில் நிறுத்தி வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கேஆர்.ராமசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப சின்னத்துரை, சாக்கோட்டை யூனியன் முன்னாள் தலைவர் சுப முத்துராமலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி வக்கீல் ராம கருமாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் அப்பச்சி சபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கருப்பசாமி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரையில் நேற்று நாடாளுமன்ற வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், மற்றும் மானாமதுரை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தி.மு.க.வைச் சேர்ந்த இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு என்ன செய்துள்ளது. தற்போது இங்கு போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளர் தான் என்ன செய்துள்ளார்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எதுவுமே செய்யவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது புதிய தொழில்கள் தொடங்க வந்த நிறுவனங்கள் பற்றி கூறினேன். வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளது குறித்தும் கூறினேன்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் எதுவுமே செய்யப்படவில்லை. முதலீடுகள் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை என்றார். நிகழ்ச்சியின் போது கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீரபாண்டி, தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.