சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு செங்கோட்டைக்கு 5 கண்டெய்னர் லாரிகளில் வந்த மருத்துவ கழிவுகள் திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு செங்கோட்டைக்கு 5 கண்டெய்னர் லாரிகளில் வந்த மருத்துவ கழிவுகள் திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 April 2019 3:45 AM IST (Updated: 9 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு 5 கண்டெய்னர் லாரிகளில் செங்கோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செங்கோட்டை,

சீனாவில் இருந்து கப்பல் மூலம் ஏற்றி தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மருத்துவ கழிவு பொருட்கள் செங்கோட்டைக்கு கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்படுவதாக நேற்று இரவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி மற்றும் அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டை பிரானூர் பார்டரில் குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் 5 கண்டெய்னர் லாரிகள் நிற்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அங்கு சென்று சோதனை நடத்தியபோது, கண்டெய்னர் லாரிகளில் இருந்த மருத்துவ கழிவுகள் பொக்லைன் எந்திரம் மூலம் கீழே இறக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த மருத்துவ கழிகளை கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் வந்த இந்த கழிவு பொருட்களை கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வந்ததாகவும், இவற்றை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் உருக்கு ஆலைகளுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. கீழே கொட்டப்பட்டு இருந்த மருத்துவ கழிவுகளை மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் கண்டெய்னர் லாரிகளில் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story