விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்


விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2019 10:00 PM GMT (Updated: 8 April 2019 10:29 PM GMT)

விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், 

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கணபதி உள்ளிட்ட 13 வேட்பாளர்களும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கோமுகிமணியன் உள்பட 24 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்களை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் பிரபுவெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story