சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சரவணன் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. அப்போது அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது, கோவில் பின்புறத்தில் உள்ள வெள்ளாற்றில் உண்டியல் கிடந்தது. பின்னர் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அந்த உண்டியலை எடுத்துக்கொண்டு, கோவில் பின்புறம் உள்ள வெள்ளாற்றங்கரையில் வைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story