திருமணத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த நபரிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்த வாலிபர்


திருமணத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த நபரிடம் பெண் குரலில் பேசி மோசடி செய்த வாலிபர்
x
தினத்தந்தி 10 April 2019 5:00 AM IST (Updated: 9 April 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரம்பூரில் திருமணத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த நபரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் பிடிபட்டார்.

பூந்தமல்லி,

பெரம்பூரை சேர்ந்தவர் ஆனந்து (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணத்திற்காக பெண் வேண்டி தனியார் திருமண தகவல் மையத்தில் ஆன்லைனில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை செல்போனில் தொடர்புகொண்டு பெண் ஒருவர் பேசி உள்ளார். அதில் அவர் ‘உங்களுடைய தகவல்களை பார்த்தேன் எனக்கு உங்களை பிடித்துவிட்டது நான் உங்களையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி உள்ளார். தனக்கு பெண் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் ஆனந்தும், அந்த பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

அப்போது அந்த பெண் தன்னுடைய சித்திக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசர தேவையாக ரூ.45 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி ஆனந்தும் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் செலுத்திவிட்டதாக தெரிகிறது. அதன்பிறகு மருந்து வாங்க பணம் வேண்டும் என்று ரூ.12 ஆயிரம் கேட்டதும், ஆனந்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் போட்டுள்ளார்.

அதன்பிறகு அந்த பெண் திடீரென்று தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்திற்கு செல்போனில் மீண்டும் தொடர்புகொண்டு அந்த பெண் பேசினார். அப்போது தனக்கு திருமணமாகி விட்டதாக ஆனந்து கூறி உள்ளார்.

அப்போது, தனக்கு ஏர்கூலர் ஒன்றை மட்டும் வாங்கி தருமாறு அந்த பெண் ஆனந்துவிடம் கேட்டுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த ஆனந்து அந்த பெண்ணை எப்படியாவது மடக்கி பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வடபழனி வருமாறு கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்த பெண் வடபழனி வந்து ஆனந்திற்கு போன் செய்துள்ளார். அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க ஆனந்து தூரத்தில் இருந்து செல்போனில் பேசியபடி கண்காணித்த போது, ஆண் ஒருவர் தன்னிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பது அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது தான் பெண் குரலில் ஆண் ஒருவர் பேசி தன்னிடம் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற ஆனந்து அந்த நபரை மடக்கி பிடித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் பெரம்பூரை சேர்ந்த செந்தில் (35) என்பதும், இதுவரை பெண் குரலில் பேசி ஆனந்திடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இவர் இதுபோல் வேறு யாரிடமாவது பெண்குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story