கறம்பக்குடியில் குப்பையில் கிடந்த நாட்டு வெடி வெடித்து துப்புரவு பெண் தொழிலாளி படுகாயம்


கறம்பக்குடியில் குப்பையில் கிடந்த நாட்டு வெடி வெடித்து துப்புரவு பெண் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 10 April 2019 4:45 AM IST (Updated: 10 April 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் குப்பையில் கிடந்த நாட்டு வெடி வெடித்ததில் துப்புரவு பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திருவோணம் சாலையில் வசிப்பவர் குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35). இவர் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுக்கோட்டை சாலை ஆதிபராசக்தி கோவில் அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை ராஜேஸ்வரி அள்ளினார். அப்போது அங்கு திடீரென ‘டமார்’ என பயங்கர சத்தம் கேட்டது. சிதறிய குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. இதைக்கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே குப்பையை அள்ளிய ராஜேஸ்வரி முகத்தில் ரத்தம் சொட்ட பலத்த காயத்துடன் கதறியபடி கீழே விழுந்தார்.

இதைக்கண்ட சக துப்புரவு தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குப்பையில் கிடந்த நாட்டு வெடி வெடித்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டதாக துப்புரவு தொழிலாளர்கள் கூறினர்.

விழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளில் சில வெடிக்காமல் குப்பையில் கிடந்துள்ள நிலையில் அது வெடித்து சிதறியதா? அல்லது வேறு ஏதேனும் நாச வேலை நடத்தப்பட்டதா? என கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் நாட்டு வெடி வெடித்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story