மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து “5 ஆண்டுகளாக எதையும் செய்யாத காவலாளி நமக்கு தேவையில்லை” மோடி மீது சீத்தாராம் யெச்சூரி தாக்கு


மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து “5 ஆண்டுகளாக எதையும் செய்யாத காவலாளி நமக்கு தேவையில்லை” மோடி மீது சீத்தாராம் யெச்சூரி தாக்கு
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

‘மக்களிடம் பணத்தை கொள்ளைடித்து 5 ஆண்டுகளாக எதையும் செய்யாத காவலாளி நமக்கு தேவையில்லை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து, கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. கோவில்பட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருகின்ற தீப்பெட்டி, கடலைமிட்டாய் தொழில்களும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பெருவணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மதவெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

அதேபோன்று பா.ஜனதாவின் ஆட்சியில் நீதித்துறை சீரழிக்கப்பட்டு உள்ளது. சி.பி.ஐ. மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியில் உள்ள வைப்புத்தொகையும்கூட மத்திய அரசால் கபளகரம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையமும் நடுநிலையாக செயல்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுபோன்று மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

ஒரு தொழிற்சாலையின் காவலாளி தினமும் இரவில் தூங்கி விட்டு, மறுநாள் காலையில் புதுப்புது கதைகளை அந்த தொழிற்சாலையின் உரிமையாளரிடம் கூறி வந்தார். ஒரு நாள் நீண்ட கதையை சொன்ன அந்த காவலாளிக்கு முதலாளி பரிசு வழங்கினார். மேலும் அவர், அந்த காவலாளியிடம் இனி நீ வேலைக்கு வர வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால் இரவு முழுவதும் தூங்கி கொண்டிருந்த காவலாளி அவருக்கு தேவையில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் மக்களின் பணத்தை கொள்ளையடித்து தற்போது ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் அப் இந்தியா என்று கூறி ஏமாற்றுகிறார். இந்த காவலாளி நமக்கு தேவையில்லை. அவர் துல்லிய தாக்குதல் நடத்திய விண்வெளியிலேயே இருந்து விடலாம். அவர் நமது நாட்டுக்கு தேவையில்லை. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் அர்ச்சுணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அழகுமுத்து பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு), ஆர்.எஸ்.ரமேஷ் (ம.தி.மு.க.), கதிரேசன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சீத்தாராம் யெச்சூரி பேசியதை முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகம்மது மொழிபெயர்த்தார்.

முன்னதாக கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.

Next Story