தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2019 3:30 AM IST (Updated: 10 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஸ்டெர்லைட் ஆலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி தொகுதியில் பிரசாரம் நல்லவிதமாக சென்று கொண்டு இருக்கிறது. நல்ல சூழல் நிலவி வருகிறது. என்னை ஆதரித்து நாளை (வியாழக்கிழமை) மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பிரசாரம் செய்கிறார். தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்து உள்ளேன். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தட்டும் என்கிறார். வருமானவரித்துறை சோதனையில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் கிடையாது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துமதம் பா.ஜனதாவுக்கு சொந்தமானது அல்ல என்று கூறுகிறார். நாங்கள் அனைத்து மதத்தையும், பண்பாட்டையும் மதிக்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தொடர்ந்து இந்துமதத்தை விமர்சித்து வந்தனர். தற்போது தேர்தலுக்காக மாற்றி பேசுகிறார்கள். இந்து மத சடங்குகளை பற்றி ஒரு திருமண வீட்டில் மோசமாக விமர்சனம் செய்தவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வுடன் உள்ள திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்துமத கடவுளை அவதூறாக பேசி வருகிறார்.

தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ? என்று தி.மு.க.வினர் தங்கள் போக்கை மாற்றி வருகின்றனர். இனிமேல் மக்கள் மு.க.ஸ்டாலினை நம்பமாட்டார்கள். இந்துக்களை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்தால் தாங்களும் காயப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இதுவரை வாழ்த்து தெரிவித்தது கிடையாது. மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோ என்றார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வந்த உடன் தி.மு.க. அறிக்கையை மறந்து விட்டார். பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நாடு முன்னேறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இனிமேல்தான் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும். இது யதார்த்தமான உண்மை. எங்கள் கூட்டணியினர் சேர்ந்து தேர்தல் களத்தில் பணியாற்றும் போதுதான் கருத்துக்கணிப்புகள் சரியாக வரும். தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை விட கள நிலவரம் மாறும். நான் நாகரிகமான அரசியல் செய்து வருகிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரிகமாக பேச வேண்டும். அவரிடம் மோசமான வார்த்தை ஜாலம் உள்ளது. மக்களின் மதிப்பீட்டில் மு.க.ஸ்டாலின் மிகவும் சரிந்து வருகிறார். தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்தாலும், அதில் நாகரிகம் இருக்கும். அந்த நாகரிகம் மு.க.ஸ்டாலினிடம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையெழுத்து போட்டது, விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க.தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஸ்டெர்லைட் ஆலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மக்கள் அதனை நம்பவில்லை.

மேலும் நதிகளை இணைக்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறியதும், ஒரு கோடி ரூபாய் தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தற்போதும் நதிநீர் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீதி, வீதியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்தும், மாடிகளில் நின்று மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

மாலையில் முத்தையாபுரம் வடக்கு தெருவில் பிரசாரத்தை தொடங்கி, வரதவிநாயகர் கோவில் தெரு, தோப்பு தெரு, அய்யன்கோவில் தெரு, நாடார் தெரு, தங்கம்மாள்புரம், சுபாஷ்நகர், முள்ளக்காடு, சவேரியர்புரம், கீதாநகர், அபிராமி நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., பா.ஜனதா பொது செயலாளர் சிவராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story