ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அரை நிர்வாணமாக ஆண்-பெண் பிணம் கள்ளக்காதல் ஜோடியா? என போலீசார் விசாரணை
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அரை நிர்வாணமாக ஆண், பெண் இறந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் கள்ளக்காதல் ஜோடியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்டு குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதி உள்ளது.
இங்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் 2 பேரும் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து ஒரு வாரத்துக்கு மேலானதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் இறந்த ஆண் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இறந்த பெண் சேலை, சட்டை அணிந்து இருந்தார். அவர்களது செருப்புகள், தண்ணீர் பாட்டில் அருகில் தனியாக கிடந்தன. எனவே அவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்றும், அவர்களது கள்ளக்காதலுக்கு இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கு வந்து உல்லாசமாக இருந்து விட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இறந்த ஆண், பெண் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த ஆண், பெண் யார்?, அவர்கள் எப்படி இறந்தனர்?, தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, அவர்கள் எப்படி இறந்தனர்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story