தூத்துக்குடியில் வாக்குச்சீட்டு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்-சின்னம் பொருத்தும் பணி
தூத்துக்குடியில் வாக்குச்சீட்டு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதற்காக தொகுதி முழுவதும் 1,595 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. விளாத்திகுளத்தில் 259 வாக்குச்சாவடிகளும், தூத்துக்குடியில் 279, திருச்செந்தூரில் 260, ஸ்ரீவைகுண்டத்தில் 259, ஓட்டப்பிடாரத்தில் 257, கோவில்பட்டியில் 281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக மொத்தம் 1,957 வாக்குப்பதிவு எந்திரம், 5 ஆயிரத்து 546 வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரம், 2 ஆயிரத்து 120 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்த எந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 3 வாக்குச்சீட்டு எந்திரம் பொருத்தப்படுகிறது.
இந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடந்தது. பெல் என்ஜினீயர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோன்று வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்திலும் வேட்பாளர்கள் விவரம் பதிவு செய்யும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story