நெல்லையில் அரசு பஸ்-விடுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை


நெல்லையில் அரசு பஸ்-விடுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 April 2019 9:30 PM GMT (Updated: 9 April 2019 8:26 PM GMT)

நெல்லையில் அரசு பஸ்கள், ஓட்டல், தங்கும் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 60 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, தினமும் இரவு பகலாக வாகன சோதனை நடத்தி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படுகின்ற பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகர பகுதிக்கு தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, அரசு பஸ்களில் பணம் கடத்தி செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பகுதியிலும், கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், பழையபேட்டை, தச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி சென்ற 3 அரசு பஸ்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதிலும் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

நெல்லையில் உள்ள பிரபல தனியார் ஓட்டல், தங்கும் விடுதிகளில் அரசியல் கட்சியினர் அறை எடுத்து தங்கி, பணம் பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபடுவதாக தேர்தல் பார்வையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓட்டல், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டனர்.

அதன்படி, நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தாசில்தார் கோயில்மணி, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர். அதிகாலையில் இருந்து மதியம் வரை நடந்த இந்த சோதனையிலும் பணம் எதுவும் சிக்கவில்லை.

Next Story