நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ‘விவிபேட்’ எந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரம்


நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ‘விவிபேட்’ எந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 8:29 PM GMT)

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ‘விவிபேட்’ எந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 1,031 வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த தொகுதியின் தலைமையிடமாக உள்ள தாலுகா அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 261 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 344 ‘விவிபேட்’ எந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட் 317 மற்றும் பேலட் யூனிட் 961 ஆகியவை அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என்று மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, ‘விவிபேட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை பதிவேற்றம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 3 பேலட் யூனிட் எந்திரங்கள் வைக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் கரூர் தாலுகா அலுவலகத்தில் 42 வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் நோட்டா பற்றி விவரத்தினை ‘விவிபேட்’ எந்திரத்தில் பதிவேற்றம் செய்யும் பணி, வாக்குப்பதிவு எந்திரங்களின் கண்காணிப்பு அதிகாரி கணேஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான சரவணமூர்த்தி ஆகியோரது மேற்பார்வையில் நடந்தது.

அப்போது அறையில் இருந்து ‘விவிபேட்’ எந்திரங்களை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் முன்னிலையில் பெங்களூருவில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் ஒவ்வொன்றாக எடுத்து அதில் சின்னங்களை பதிவேற்றம் செய்தனர். வேட்பாளர்களின் சின்னம் பட்டியலை அதிகாரிகள் கையில் வைத்து கொண்டு, அவை அனைத்தும் ‘விவிபேட்’ எந்திரத்தில் பதிவாகியிருக்கிறதா? என சரிபார்த்தனர். அப்போது, சிறு கோளாறு ஏற்பட்ட எந்திரங்களை அதிகாரிகள் ஒதுக்கி வைத்து விட்டனர்.

சின்னம் பதிவேற்றம் செய்யும் பணிகளை தேர்தல் வீடியோகிராபர் குழுவினர் வீடியோ எடுத்தனர். மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகளை போலீசார் கணினி திரையில் பார்வையிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்னும் ஓரிரு நாட்கள் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கும் எனவும், பல்வேறு சரிபார்ப்புக்கு பின்னர் தான் ‘விவிபேட்’ எந்திரம் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணியில் கரூர் தாசில்தார் பிரபு உள்பட வருவாய்த்துறையினர் பலர் ஈடுபட்டிருந்தனர். 

Next Story