மூங்கில்துறைப்பட்டு அருகே, வாகனம் மோதி தாய்-மகன் பலி


மூங்கில்துறைப்பட்டு அருகே, வாகனம் மோதி தாய்-மகன் பலி
x
தினத்தந்தி 9 April 2019 10:45 PM GMT (Updated: 9 April 2019 8:30 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தாய், மகன் பலியாகினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர்(40). இவருக்கு ஜாக்குலின் சகாயமேரி(33) என்ற மனைவியும், லூயிமரியமான்போர்ட்(11) என்ற மகனும் இருந்தனர். ஜான்பீட்டர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். ஜாக்குலின் சகாயமேரி தனது மகனுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார். லூயி மரியமான்போர்ட் மூங்கில்துறைப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது லூயி மரியமான்போர்ட்டுக்கு தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தான்.

இந்த நிலையில் ஜாக்குலின் சகாயமேரி தனது மகனுடன் பெங்களூரு சென்று ஜான்பீட்டரை பார்க்க முடிவு செய்தார். அதன்படி அவர் பெங்களூரு செல்வதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது மகன் லூயி மரியமான்போர்ட்டுடன் மைக்கேல்புரம் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜாக்குலின் சகாயமேரி, லூயி மரியமான்போர்ட் ஆகியோர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தாயும்-மகனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மைக்கேல்புரம் பேருந்து நிறுத்தத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனரை கைது செய்யக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம், விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுனரை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.

இதற்கிடையே விபத்தில் பலியான ஜாக்குலின் சகாயமேரி, லூயி மரியமான்போர்ட் ஆகியோரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து காரணமாக கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story