ராகுல்காந்தி பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள், நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத் சொல்கிறார்


ராகுல்காந்தி பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள், நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்தத் சொல்கிறார்
x
தினத்தந்தி 10 April 2019 4:15 AM IST (Updated: 10 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி பிரதமராக மக்கள் விரும்புவதாகவும், நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் தேனியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தேனி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தேனி வருகிறார். இதற்காக தேனி அன்னஞ்சி விலக்கு அருகே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது. இந்த பகுதியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத், தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கட்சியினருடன் விவாதித்தனர்.

பின்னர் தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தங்கியுள்ள வீட்டில், சஞ்சய் தத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தமிழகம் முழுவதும் சென்று வருகிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது தேனி வளர்ச்சி இல்லாத மாவட்டமாக உள்ளது. மிக முக்கிய பிரமுகராக உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் முதல்-அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனாலும், இந்த மாவட்டம் வளர்ச்சியற்ற நிலையில் உள்ளது. வைகை அணையை சுற்றியுள்ள கிராமங்களில் கூட குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக தெரியவில்லை. இங்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வின் விதிகள் தான் அமலில் உள்ளதாக பார்க்க முடிகிறது. ஏனெனில், இங்கு வாகன தணிக்கை சரியாக நடக்கவில்லை. அ.தி.மு.க.வினர் வெளிப்படையாக பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. வாகன அனுமதிச் சான்றை வண்ண நகல் எடுத்து வேறு வாகனங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வினர் சுயஉதவிக்குழுவினர், தொண்டு நிறுவனங்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்குகின்றனர்.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பழைய தேர்தல் அறிக்கையின் நகல் தான். 25 ஆண்டுகளாகவே ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறி வருகின்றனர். நாட்டில் கடந்த 30 ஆண்டு காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தான் அதிக ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story