மாவட்ட செய்திகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பெருந்துறையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Stable rule in the middle Vote for double leaf

மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பெருந்துறையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் பெருந்துறையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பெருந்துறையில் நடந்த பிரசாரத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அண்ணாசிலை சந்திப்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:–

இதே பெருந்துறையில் நான் வியாபாரம் செய்து இருக்கிறேன். சுமார் 15 ஆண்டுகள் இங்கு வியாபாரியாக இருந்தேன். அப்படி நான் பழகிய இடத்தில் வந்து உங்களிடம் வாக்குகள் சேகரிக்கிறேன்.

மத்தியில் ஒரு திறமையான பிரதமர் வரவேண்டும். மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்கிறேன். நமது சின்னம் இரட்டை இலை. இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக இருப்பவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர், நல்லவர், வல்லவர், அனைவரிடமும் பண்பாக பழகக்கூடியவர். அவர் வெற்றி பெற்றால் பெருந்துறை தொகுதி மக்களாகிய உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் கேட்கும்.

பெருந்துறை தொகுதியானது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அவருடைய கோட்டையாக இருந்தது. அம்மாவின் காலத்தில் யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக இருந்தது. அந்த 2 பெரும் தலைவர்கள் வழியில் ஆட்சி செய்யும் எங்களுக்கும் நீங்கள் கொடுத்த அதே ஆதரவினை தந்து எங்கள் அரசின் வலிமையையும், சக்தியையும் காட்ட இந்த தேர்தல் மூலம் வாக்குகளை அள்ளித்தாரீர், தாரீர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய கூட்டணியில் இருக்கும் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இந்த பெருந்துறை தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பெருமளவில் நிதி பெற முடியும். எனவேதான் நமக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். நாடு வலிமையான பிரதமரை கொண்டிருக்க வேண்டும். வலிமையும், நிலையான ஆட்சியும் மத்தியில் இருந்தால் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும்.

தி.மு.க. மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றது. ஆனால், அந்த காலத்தில் தமிழகத்துக்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பம் வளர்ச்சி அடைந்தது. ஸ்டாலினின் குடும்பம் வளர்ச்சி அடைந்தது. அவர்கள் நாட்டு மக்களைப்பற்றியோ, நாட்டு மக்களின் குடும்பங்களைப் பற்றியோ சிந்திக்க மாட்டார் கள்.

நமது பிரதமர் வேட்பாளர் மோடி என்று அறிவித்து விட்டோம். ஆனால், தி.மு.க. கூட்டணியில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று தி.மு.க. மட்டும்தான் கூறுகிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சியும் கூறவில்லை. கேரளாவில் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன. தமிழகத்தில் ஆதரிக்கின்றன. இவ்வாறு அந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது.

இந்த தேர்தலில் எந்த கட்சி மத்தியில் ஆட்சி செய்வது. யார் பிரதமராக வருவது என்பதற்கான தேர்தல். ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் நடப்பதுபோன்று ஒரு தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளார். மக்களை குழப்பி வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைத்து கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளார்.

அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றியது இல்லை. 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறினார்கள். யாருக்காவது கொடுத்தார்களா?. இல்லை. இப்படி பச்சைப்பொய்யை தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறார்கள். சொல்வதெல்லாம் பொய். அது ஒரு வெற்று தேர்தல் அறிக்கை. ஸ்டாலின் அரசியல் நாடகமாடுகிறார். நான் கடன்களை ரத்து செய்வோம் என்கிறார். அவர் எப்படி நிறைவேற்ற முடியும். ஆளும் கட்சி அ.தி.மு.க., ஆட்சி செய்யும் முதல்–அமைச்சர் நான், இன்னும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொன்னால் செய்ய முடியும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர். ஆனால் அவர்தான் முதல்–அமைச்சர் என்பது போலவும், தி.மு.க. ஆட்சி செய்வது போலவும் வெற்று அறிக்கையை அறிவித்து உள்ளார்.

ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும். 2011–ல் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவோம் என்றோம். தந்தோம். இதுபோல் விவசாயிகளுக்கு 4 மாதத்துக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் தருவோம் என்றும், சிறு–குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தருவோம் என்று பா.ஜ.க. அறிவித்து இருக்கிறது.

தமிழ்நாடு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு நிறைந்த மாநிலமாக இருந்தது. இப்போது மின் மிகை மாநிலமாக மாறியதுடன், மின்சார உற்பத்திக்காக மத்திய அரசின் விருதினை பெற்று உள்ளது.

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடுகள் தந்த அரசு அம்மாவின் அரசு. நெசவாளர்களின் இன்னல்கள், துன்பங்களை அறிந்த நாங்கள் பல்வேறு திட்டங்களை அளிக்க இருக்கிறோம். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வற்புறுத்துவோம். தொலைக்காட்சி கேபிள் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் நிலையான ஆட்சி, திறமையான பிரதமரின் கீழ் அமைய இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.