வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: நூற்பாலை அதிபருக்கு 13 ஆண்டு சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்டதில் நூல் மில் அதிபருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன்(வயது 39). இவர் நூற்பாலை அதிபர். இவருக்கும் அவினாசி பழங்கரையை சேர்ந்த தாரணிக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 150 பவுன் நகை, கார், ரூ.5 லட்சத்தை தாரணியின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகும் சங்கமேஸ்வரன் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 18–12–2011 அன்று தாரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கமேஸ்வரனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், இவற்றை தனித்தனியாக சங்கமேஸ்வரன் அனுபவிக்குமாறு நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.