திருப்பூரில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கர்ப்பிணி தற்கொலை
திருப்பூரில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் ரோடு ராஜீவ்காந்தி வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். ஆட்டோ டிரைவர். இவர் பவானி (வயது 22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் தற்போது பவானி 2 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
கடந்த சில நாட்களாக பிரபாகரன் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பவானிக்கு பிரபாகரன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இதே பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக பவானி குழந்தையை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று பவானியை பார்ப்பதற்காக பிரபாகரன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவானி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 2 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.