புவனகிரி அருகே, வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


புவனகிரி அருகே, வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 April 2019 10:45 PM GMT (Updated: 9 April 2019 11:03 PM GMT)

புவனகிரி அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள வயலூர் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 594 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்த புதுச்சேரியை சேர்ந்த சரத்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 3 லட்சத்து 60 ஆயிரத்து 594 ரூபாயை எடுத்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பறக்கும் படை அதிகாரி ஜெயந்தி தலைமையிலான குழுவினர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தீப்பாய்ந்த நாச்சியார்கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம் இரவன்குடி கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், அவர் உரிய ஆவணங்கள் இன்றி 51 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட 4 லட்சத்து 12 ஆயிரத்து 94 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் புவனகிரி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல், தாசில்தார் சத்தியன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் சிதம்பரத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story