பணம் இருப்பதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட கன்டெய்னர் லாரியில் தேயிலை தூள் மூட்டைகள் இருந்ததால் விடுவிப்பு
கோவையில் பணம் இருப்பதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட கன்டெய்னர் லாரியில் தேயிலை தூள் இருந்ததால் விடுவிக்கப்பட்டது. வதந்தி பரப்பி, டிரைவரை தாக்கிய மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு கன்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அது ரோட்டில் தாறுமாறாக சென்றதால், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருக்கலாம் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அங்கு திரண்டு அந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்தனர். அதில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் கொண்டு செல்வதால் தான் கன்டெய்னர் லாரி வேகமாக சென்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் அந்த லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர், கோவையை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பதும், கொச்சி துறைமுகத்துக்கு தேயிலை தூள் கொண்டு செல்லப் படுகிறது என்றும் தெரிவித்தார். அதை, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஏற்கவில்லை.
கன்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. ஆனால் டிரைவர் தேயிலை தூள் என்று பொய் சொல்கிறார். கன்டெய்னரை திறந்து பார்த்தால்தான் நாங்கள் நம்புவோம் என்று அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கூறினார்கள். ஆனால் அந்த கன்டெய்னரில் சீல் வைக்கப்பட்டு இருந்ததால் அதை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே டிரைவர் வைத்திருந்த ஆவணங்களை அதிகாரிகள் வாங்கி பார்த்த போது அதில், 15 டன் தேயிலை தூள் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்வது தெரிந்தது.
எனினும் பொதுமக்கள் அங்கு அதிகளவில் திரண்டு கோஷமிட்டதால், அதிகாரிகள் அந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் 45 டன் தேயிலை தூள் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்க கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. எனினும் அந்த கன்டெய்னர் லாரியை திறந்து கலெக்டர் முன்னிலையில் சோதனை செய்ய முடிவு செய்யப் பட்டது.
இதற்காக நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கலெக்டர் ராஜாமணி, பயிற்சி கலெக்டர் சினேகா, கோவை ஆர்.டி.ஓ. தனலிங்கம் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உள்பட பலர் அங்கு வந்தனர். அது போன்று வெள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஹேமந்த்ஷா மற்றும் ஊழியர்களும் அங்கு வந்தனர்.
பிறகு ஊழியர்கள் அந்த கன்டெய்னரில் இருந்த சீலை அகற்றி திறந்து பார்த்தனர். அப்போது, அதற்குள் ஏராளமான மூட்டைகள் இருந்தன. அதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கீழே இறக்கி வைக்கப் பட்டன. அவற்றை பிரித்து கலெக்டர் ராஜாமணி சோதனை செய்த போது அதற்குள் தேயிலை தூள் இருந்தது. தொடர்ந்து பல மூட்டைகளை சோதனை செய்த போதும் அதற்குள் தேயிலை தூள் தான் இருந்தது.
அந்த தேயிலை தூள் கொண்டு செல்ல முறையான வரி செலுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து வணிக வரித்துறை, சுங்கத்துறை, ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் முறையாக அனைத்து வரிகளும் செலுத்திதான் அவற்றை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த தேயிலை தூள் மூட்டைகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப் பட்டது.
இதையடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அந்த கன்டெய்னரில் இருந்த தேயிலை தூள் லாரிக ளில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இது தேர்தல் நேரம் என்பதால், கன்டெய்னர் லாரியில் சந்தேகப்படும்படியான பொருட்கள் அல்லது பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. அதில் பணம் இல்லை. ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக தேயிலை தூள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்களும் இருக்கிறது. இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரிஅதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த 300 வாகனங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் சோதனையின் போது பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காட்டினாலும் பணத்தை பறிமுதல் செய்வதாக புகார் வந்து உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு, தேர்தல் நடத்தை விதிமுறையின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம். கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அது முற்றிலும் தவறு. சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் தான் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி பாகுபாடு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தேயிலை தூள் அனுப்பி வைத்த தனியார் நிறுவன உரிமையாளர் ஹேமந்த்ஷா கூறும்போது, ‘நாங்கள் அனுப்பிய 3 கன்டெய்னரிலும் தலா 15 டன் தேயிலை தூள் இருந்தது. நாங்கள் பலமுறை இதுபோன்று தேயிலை தூள் அனுப்பி வைத்து உள்ளோம். அதற்கான ரசீதுகள் பிடிபட்ட லாரி டிரைவரிடம் தான் உள்ளது. இந்த லாரிகள் நேற்று 2 மணிக்கு கப்பலில் ஏற்ற வேண்டும். ஆனால் ஒரு லாரியை அதிகாரிகள் பிடித்து விட்டதால் நேற்று கப்பலில் ஏற்ற முடியவில்லை’ என்றார்.
இந்த நிலையில் தேயிலை தூள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பி, லாரி டிரைவரை தாக்கியதுடன், அந்த லாரியை சேதப்படுத்தியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முகமதுசாஜித் (வயது 27) என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர அடையாளம் தெரிந்த சில நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story