திருச்செங்கோட்டில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்


திருச்செங்கோட்டில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு - பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
தினத்தந்தி 10 April 2019 3:45 AM IST (Updated: 10 April 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 8-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவிகள் குற்றம் சாட்டினர்.

இதேபோல் அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி சாப்பாடு வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்யும்படி மாணவிகளை வற்புறுத்தியதாகவும், அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் முறையிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் திரண்டு நேற்று காலை பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அந்த ஆசிரியர், ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, சேகர் மற்றும் போலீசாரும், கல்வி அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று குறிப்பிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story