தேர்தல் துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி நூதன பிரசாரம்


தேர்தல் துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி நூதன பிரசாரம்
x
தினத்தந்தி 10 April 2019 4:48 AM IST (Updated: 10 April 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி நூதன பிரசாரத்தை தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி,

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் துறை செய்து வருகிறது. தற்போது தன்னார்வலர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

அதாவது 10 தன்னார்வலர்கள் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி மோட்டார்சைக்கிள்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தேர்தல்களில் பங்கேற்பதற்கான முறைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் கல்வி அமைப்பின் ஆலோசகர் நெடுஞ்செழியன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மற்றும் தேர்தல் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த மோட்டார்சைக்கிள்களில் ஒலிப்பெருக்கி வசதியும் உள்ளது. மேலும் கோடை வெயிலை சமாளிக்கும் விதத்தில் மோட்டார்சைக்கிளின் 4 பக்கங்களிலும் இரும்பு கம்பியை அமைத்து மேல் பகுதியில் கீற்று கொட்டகை போன்ற அமைப்பினையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த வாகனத்தில் தன்னார்வலர்கள் புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்களையும் அவர்கள் ஏந்தி சென்றனர். தொகுதிதோறும் அவர்கள் தேர்தல் அறிவிப்பு சீட்டினை மக்களுக்கு அளித்தனர்.

Next Story