சுயேச்சை வேட்பாளர் சுமலதா புகார் எதிரொலி : மண்டியா மாவட்ட கலெக்டர் பணி இடமாற்றம்
சுயேச்சை வேட்பாளர் சுமலதா புகார் எதிரொலியாக மண்டியா மாவட்ட கலெக்டரை பணி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு,
மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் நிகில் குமாரசாமியும், நடிகை சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். அந்த தொகுதிகளில் அவர்கள் 2 போ் இடையே தான் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் நிகில்குமாரசாமியின் வேட்புமனு, சட்டவிரோதமாக உள்ளதாக சுயேச்சை வேட்பாளர் சுமலதா தேர்தல் அதிகாரியான கலெக்டர் மஞ்சுஸ்ரீயிடம் புகார் தெரிவித்தார். ஆனால், அதை நிராகரித்துவிட்ட தேர்தல் அதிகாரி மஞ்சுஸ்ரீ, நிகில் குமாரசாமியின் மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
இதையடுத்து, வேட்பாளர் சுமலதா, தேர்தல் அதிகாரி மஞ்சுஸ்ரீ ஒருதலைபட்சமாகவும், முதல்-மந்திரிக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக புகார் கூறினார். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற அவரை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் பார்வையாளரிடம் சுமலதா மனு கொடுத்தார்.
இந்த நிலையில் மண்டியா மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீயை பணி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அந்த மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பி.சி.ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார். மஞ்சுஸ்ரீக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story