காங்கிரஸ் கட்சியில் கருத்து வேற்றுமைகளை சரிசெய்துள்ளோம் - தினேஷ் குண்டுராவ் பேட்டி
மண்டியாவில் முதல்-மந்திரியின் மகன் வெற்றிபெற வியூகம் வகுத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் கருத்து வேற்றுமைகளை சரிசெய்துள்ளோம் என்றும் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி பாசிச கொள்கையுடன் செயல்படுகிறார். அனைத்து விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க மோடி முயற்சி செய்கிறார். எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். ஆட்சி அதிகாரத்திற்காக மோடி எதையும் செய்ய தயாராக உள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. சில தொகுதிகளில் பிரச்சினைகள் இருப்பது உண்மை தான். அந்த கருத்து வேற்றுமைகளை சரிசெய்துள்ளோம். மண்டியாவில் மட்டும் பிரச்சினைகள் வேறு விதமாக உள்ளன.
அதையும் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி கட்சியின் வெற்றிக்கு உழைக்காத நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வெற்றிக்கு நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம். அந்த வியூகம் கண்டிப்பாக வெற்றி பெறும். வியூகம் என்ன என்பதை இங்கு சொல்ல முடியாது.
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியுள்ளோம். சிவமொக்காவில், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பாவை நிறுத்தியுள்ளோம். அவர் பலமான வேட்பாளர்.
கர்நாடகத்தில் கூட்டணி கட்சிகள், அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடி அலை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் களத்தில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகள், மோடியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். பெங்களூரு வடக்கு, பெங்களூரு புறநகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
பெங்களூரு தெற்கு மற்றும் மத்திய பெங்களூரு ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. ஹாசன், மண்டியா, துமகூரு ஆகிய தொகுதிகளில் கூட்டணி கட்சி வெற்றி பெறுவது உறுதி. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எனது பங்கு இல்லை என்று சொல்வது தவறு.
கர்நாடக அளவில் கட்சியின் அனைத்து முடிவுகளிலும் நான் முக்கிய பங்காற்றியுள்ளேன். சித்தராமையா முன்னாள் முதல்-மந்திரி. மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர். அதனால் அவர் கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story