சித்ராபவுர்ணமியன்று கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


சித்ராபவுர்ணமியன்று கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2019 4:30 AM IST (Updated: 10 April 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு நடப்பதால் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் சரக்கு ஆட்டோ சென்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை, 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று சித்ரா பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ளனர்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் மற்றும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து சரக்கு ஆட்டோவில் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அதில் நின்றவாறு சென்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈசான்ய லிங்கத்தில் இருந்து நகராட்சி மத்திய பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, தேரடி வீதி, ராஜகோபுரம், திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர வீதி, பழைய அரசு மருத்துவமனை, செங்கம் சாலை, அரசு கலைக் கல்லூரி, ஆணாய்பிறந்தான், அடிஅண்ணாமலை, அபய மண்டபம், காஞ்சி சாலை, இடுக்குப் பிள்ளையார் கோவில் வழியாக அண்ணா நுழைவு வாயில் வரை தற்காலிக பேருந்து நிறுத்தம் வழியாக அவர் சென்றார். அப்போது கிரிவலப்பாதையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, போக்குவரத்து உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஜெயசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, உதவி கலெக்டர் ஸ்ரீதேவி உள்பட பலர் உடன் சென்றனர்.

பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 18 -ந்தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதால், கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், வாக்காளர்களுக்கும் எந்த வித தடையுமின்றி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

கிரிவலம் வரும் பக்தர்கள் மறுநாள் மாலை 5 மணி வரை நடைபயணம் மேற்கொள்ளலாம். அதனால் பக்தர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு, கிரிவலம் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கிரிவலப் பாதையில் 14 வாக்குப் பதிவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 47 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்கள் வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியதாகும்.

அதேபோல் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு மையங்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியதாகும். வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலையில் நடைபெறுவதால் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 9 அணுகு சாலைகள் வழியாக கூடுதல் பாதுகாப்புடன் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story