மோடி ஆட்சியில் அம்பானியும், அதானியும் மட்டும் பயனடைந்துள்ளனர் திருவாரூரில், டி.டி.வி. தினகரன் பேச்சு


மோடி ஆட்சியில் அம்பானியும், அதானியும் மட்டும் பயனடைந்துள்ளனர் திருவாரூரில், டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 4:45 AM IST (Updated: 11 April 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

மோடி ஆட்சியில் அம்பானியும் அதானியும் மட்டும் பயனடைந்துள்ளனர் என்று திருவாரூரில், டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் தெற்குவீதியில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செங்கொடி ஆகியோரை ஆதரித்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஒரு மினி சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரு சேர நடைபெற உள்ளது. தமிழகத்தை வஞ்சித்து வரும் மோடிக்கும் அவருடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். இதற்கு பரிசு பெட்டகத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடித்து இருப்பதற்கு யார்? காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலாவால் தான் ஆட்சி நீடித்து வருகிறது.

திருவாரூர் தொகுதி மக்கள் ஆட்சி மாற்றத்துக்கான முடிவை எடுத்துவிட்டனர். எனவே பரிசு பெட்டகம் நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் மற்றொரு கூட்டணி உள்ளது. அது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி. 50 ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் கூட்டணி. மதத்தை பற்றியும், சாதியை பற்றியும் அரசியல்வாதிகள் பேச வேண்டிய தேவையில்லை. தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளது. முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும். சாலை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

காவிரி நீரை பெற்று தருவதற்கு போராட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டியால் சிறு, குறு வியாபாரிகள், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அனைவருடைய வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடுவதாக மோடி கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணத்தை எடுப்பதற்காக ரோட்டில் நிற்க வைத்தார். மோடி ஆட்சியில் அம்பானியும், அதானியும் மட்டும் பயனடைந்துள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் முக்கிய கோரிக்கையான நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைத்திட வேண்டும். நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலையை நவீனமயமாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஓடம்போக்கிஆற்றை தூர்வார வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். கூத்தாநல்லூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட வேண்டும்.

கோவையில் இருப்பதுபோல விவசாய கல்லூரி திருவாரூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அமைக்கப்பட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்த திட்டங்கள் நிறைவேற திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.காமராஜூக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செங்கொடிக்கும் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story