மொபட் மீது பஸ் மோதல் பள்ளி மாணவி பலி; தாய்–மகள் படுகாயம்


மொபட் மீது பஸ் மோதல் பள்ளி மாணவி பலி; தாய்–மகள் படுகாயம்
x
தினத்தந்தி 10 April 2019 9:45 PM GMT (Updated: 10 April 2019 7:50 PM GMT)

மாதவரம் அருகே, மொபட் மீது தெலுங்கானா மாநில பஸ் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தாய்–மகள் படுகாயம் அடைந்தனர்.

செங்குன்றம்,

திருவொற்றியூர் மேற்குமாட வீதியை சேர்ந்தவர் பிரேமா(வயது 35). இவர், சென்னை திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ரக்சிதா(15). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருடைய தோழியான, திருவொற்றியூர் வடக்குமாட வீதியை சேர்ந்த தேவானந்த் என்பவருடைய மகள் யாமினி(15) என்பவரும் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ரக்சிதா, யாமினி இருவரையும் பிரேமா தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு அண்ணாநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மாதவரம் மேம்பாலம் அருகே வந்தபோது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த தனியார் பஸ், இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யாமினி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரேமா, அவருடைய மகள் ரக்சிதா இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் தாய்–மகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story