கூடுவாஞ்சேரி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
கூடுவாஞ்சேரி அருகே நண்பர்களுடன் குளித்தபோது, கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கருணானந்தன். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் நண்பர்களுடன் ஜெகதீஷ் கூடுவாஞ்சேரி அடுத்த கோனாதி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். கிணற்றில் இறங்கி நண்பர்களுடன் குளித்தபோது நீச்சல் தெரியாத ஜெகதீஷ் திடீரென நீரில் மூழ்கினான். இதனை பார்த்த சக நண்பர்கள் ஜெகதீசை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஜெகதீஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.
தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவனின் உடலை சுமார் 2 மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.