கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தர்மபுரியில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தர்மபுரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து பிரசார கூட்டங்கள் தர்மபுரி 4 ரோடு, அரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர் வரவேற்று பேசினார். இந்த கூட்டங்களில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தர்மபுரியில் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒரே கரமாக இணைந்து மாம்பழ சின்னத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும். தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர் பல நல்ல திட்டங்களை தீட்டியுள்ளார். ஆகவே நீங்கள் உங்கள் வாக்கை பயன்படுத்தி அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும். அப்போதுதான் நல்ல திட்டங்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு கிடைக்கும்.
அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவதற்கு முன்பு எத்தனையோ விதமான சூழ்ச்சிகளை தி.மு.க. செய்தது. ஏனென்றால் இந்தக் கூட்டணி அமைந்தால் தி.மு.க. அழிந்து போய்விடும். அதனால் பல சூழ்ச்சிகள் செய்து இந்த கூட்டணி ஏற்படாதவாறு முயற்சி செய்தார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த சூழ்ச்சியை முறியடித்து மெகா கூட்டணி அமைத்தனர்.
சில ஊடகங்கள் கருத்து கணிப்பு என்று கூறிக்கொண்டு கருத்துத் திணிப்பை புகுத்தி வருகிறார்கள். இந்த கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் குருநாதன், பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி. பாரிமோகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வரதராஜன், த.மா.கா. மாவட்ட தலைவர் ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், தே.மு.தி.க. மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story