மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு நேரு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா (வயது 43). இவர்களது மகள் திலகா தேவி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மகளின் காதல் திருமணத்தை முருகன் ஏற்கவில்லை. திலகவதி தன்னுடைய கணவருடன் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் திலகவதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்த உஷா தன் மகளையும், அவள் குழந்தையையும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த உஷா நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.