மத்தியில் மதவாத ஆட்சியை அகற்றுங்கள் - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பேச்சு
மத்தியில் மதவாத ஆட்சியை அகற்றுங்கள் என்று மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.நேற்று காலை கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் வார்டு, வார்டாக திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு காரமடை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு நான் ஒன்றும் புதியவன் அல்ல. என்னை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நான் ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் வரை 5 ஆண்டு காலம் மக்கள் பணியாற்றி உள்ளேன். மீண்டும் என்னை தேர்ந்தெடுத்தால் கடந்த காலத்தை விட கூடுதலாக பணிகளை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். மத்தியில் மதவாத ஆட்சியையும், மாநிலத்தில் ஊழல் ஆட்சியையும் அகற்றுங்கள். பிரதமராக ராகுல் காந்தியும், மாநிலத்தில் முதல்-அமைச்சராக ஸ்டாலினும் பொறுப்பேற்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் சிறுமுகை, பெத்திக்குட்டை, பெரியகுமாரபாளையம், இரும்பறை, இலுப்பநத்தம், தேரம்பாளையம், ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இரவு 9.30 மணியளவில் ஆ.ராசா டேங்க் மேடு பகுதியில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார்.
அப்போது அவருடன் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் எம்.கே.கே.விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story