ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி


ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான ஊழல் விவகாரம், நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை, 

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல்களை மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருட்டு போனதாக முன்பு மத்திய அரசு கூறியது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான அம்சத்தை பாதுகாக்க முடியாத அரசு, நாட்டு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்?.

மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை உள்ளதால் எந்தவித சட்டரீதியான விசாரணையும் ரபேல் ஒப்பந்தத்தில் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த தகவலும் பொய்யாகும். மத்திய கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி) அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் மத்திய அரசு விவாதித்ததாக கூறுகிறது. இதுவும் தவறான தகவல்.

ரபேல் விமான கொள்முதலில் புதிய ஒப்பந்தம் மூலம் 41 சதவீதம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ரபேல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் மத்திய பாரதீய ஜனதா அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறது. 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இறுதியில் 36 விமானங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒப்பந்தத்துக்கு பின்னும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது. ரபேல் வழக்கை இனிமேல் தாமதப்படுத்தாமல், விரைவாக விசாரணை நடத்தி, வழக்கை முடிக்க வேண்டும்.

ரபேல் போர் விமான ஊழலில் பெறப்பட்ட பணம், பாரதீய ஜனதா கட்சிக்கு நன்கொடை பத்திரமாக மாற்றப்பட்டு மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அரசியல் கட்சிகளில் பாரதீய ஜனதா கட்சிக்குதான் 94.5 சதவீதம் நன்கொடை பத்திரங்கள் வந்து இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. அரசியல் ரீதியான ஊழலை, சட்டபூர்வமாக்கி உள்ளார்கள். ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளனர்.

ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு, முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளில் வந்துள்ளது. இந்த தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் மயமாக்குவதற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து சலுகை சார்ந்த முதலாளித்துவத்துக்கு மத்திய பாரதீய ஜனதா அரசு உதவிபுரிந்து இருக்கிறது.

ராணுவத்தை பிரதமர் மோடி அரசியலுக்கு பயன்படுத்துகிறார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார் மனு அளித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. தேர்தல் கமிஷன் சில விஷயங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வருவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் போன்றது.

பாலக்கோட், புலவாமா தாக்குதலுக்கு பின்னரும் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டின் கிழக்குப்பகுதியிலும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது சரியல்ல. பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார். சி.பி.ஐ. மற்றும் வருமானவரித்துறை அமைப்புகளை பாரதீய ஜனதா அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது.

மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் இது. இந்த தேர்தலில் மக்கள் சுனாமியாக மாறி தீர்ப்பு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் உள்பட தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது.

கோவையில் குடிநீர் வினியோகத்தை எடப்பாடி அரசு மூலம் பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர்தான் யார் பிரதமர் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசமுடியும். இப்போதே அதுகுறித்து பேச முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story