வீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீரபாண்டி,
திருவண்ணாமலை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பனியன் நிறுவன தொழிலாளியான இவர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்வத்தன்று கார்த்திக்கு தனது நண்பர் தீனதயாளன் (28) என்பவருடன் வீரபாண்டி பகுதிக்கு கிரிக்கெட் விளையாட சென்றார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாட வந்த நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த எம்.ராஜா என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து எம்.ராஜாவிடம் பேசுவதற்கு குடிபோதையில் கார்த்திக் தனது நண்பர்களான தீனதயாளன், கண்ணன் ஆகியோருடன் கத்தி மற்றும் கட்டையுடன் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களான கருப்பு என்கிற சரவணன் (29), வெங்கடேசன் (32), ஆர்.ராஜா (27), முத்துக்குமார் (28) ஆகியோர் அங்கு இருந்துள்ளனர்.
இதையடுத்து எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களுடன், கார்த்திக் மற்றும் கார்த்திக் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் கார்த்திக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீரபாண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்மபந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு கருப்பு என்கிற சரவணன், ஆர்.ராஜா, வெங்கடேசன், எம்.ராஜா, முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.
Related Tags :
Next Story