மக்களின் வாழ்வு சிறக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு
மக்களின் வாழ்வு சிறக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து த.மா.கா. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திறந்த வேனில் நின்று வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது பல்வேறு திட்ட பணிகள் திருப்பூருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் தொகுதியில் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் பணியை செய்து வருகின்றனர். மக்களின் வாழ்வு சிறக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள். திருப்பூரில் 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில் சாய, சலவை தொழிலுக்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.103 கோடியில் கலெக்டர் அலுவலகம், நெசவாளர்கள் 500 பேருக்கு தலா ரூ.2.60 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்காக 7 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பனியன் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மாநகருக்கு ரூ.1400 கோடியில் 4-ம் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நெருப்பெரிச்சல் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் 1750 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ரூ.76 கோடி மானியத்தில் 3 ஆயிரம் வீடுகள் ஏழை எளிய தொழிலாளர்களுக்கு கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.150 கோடியில் நொய்யல் நதிக்கரை சீரமைக்கப்பட்டு இருகரையிலும் நடைபயிற்சி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.900கோடியில் புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரை மேம்பாலம் அமைக்க கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்தியில் பா.ஜனதா அரசு தேவை. மத்தியில் வளமான, வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற உறுதியை மோடி அரசு நமக்கு கொடுத்துள்ளது. அதற்கு உறுதுணையாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள். மத்திய, மாநில அரசுகளின் ஒத்தக்கருத்தின் படி தமிழக மக்களின் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. தி.மு.க. கூட்டணி மக்கள் வெறுக்கும் கூட்டணி. பெண்கள் முன்னேற்றம் அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதனால் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை கொடுக்க மத்திய, மாநில அரசுகள் தயார்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார்(வடக்கு), சு.குணசேகரன்(தெற்கு), த.மா.கா. மாவட்ட தலைவர் ரவிகுமார் உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story