அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை பாரதீய ஜனதா செவி கொடுத்து கேட்கவில்லை - டி.ராஜா குற்றச்சாட்டு
அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை பாரதீய ஜனதா செவி கொடுத்து கேட்கவில்லை என்று திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.
திண்டிவனம்,
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சிலைகள் திறக்கும் உன்னதமான நோக்கத்திற்காக சென்றேன். அங்கு நிறுவப்பட்ட கார்ல்மார்க்ஸ் சிலையை திறக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பாட்டாளியின் பெயராலேயே பாட்டாளி மக்கள் கட்சியை நடத்தும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசை பார்த்து நான் கேட்கிறேன். பாட்டாளிகளுக்காக கட்சி நடத்தும் நீங்கள் எப்படி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்தீர்கள். இந்த தேர்தல் இந்தியாவின் சரித்திரத்தில் முக்கியமான தேர்தல். ஜனநாயக குடியரசின் அடித்தளங்கள் தளர்த்தப்படுமா? என்ற கேள்வி இந்த தேர்தலில் முன் வைக்கப்படுகிறது.
மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவின் ஆட்சி மோசடி ஆட்சி. அக்கட்சியினர் வாய் சவடால்களை தான் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை பாரதீய ஜனதா செவி கொடுத்து கேட்கவில்லை. எனவே மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை அகற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு டி.ராஜா பேசினார்.
Related Tags :
Next Story