பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி - விழுப்புரத்தில் பரபரப்பு
பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கீழ்முத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணி (வயது 34). இவருடைய அண்ணி லட்சுமி (29). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த இவர்கள் இருவரும் திடீரென தாங்கள் பையில் வைத்திருந்த கேனை எடுத்து திறந்து அதிலிருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்கள் இருவரின் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
அதன் பிறகு இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், நாங்கள் இருவரும் வீட்டுமனைகள் வாங்குவதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த 3 பேரிடம் சிறுக, சிறுக பணம் கட்டினோம். மொத்தம் நாங்கள் இருவரும் தலா ரூ.4 லட்சத்தை கட்டியுள்ளோம்.
பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு வீட்டுமனைகளை வழங்கவில்லை. பணத்தை திருப்பித்தருமாறு கேட்டதற்கும் அவர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீட்டுமனை தருவதாக கூறி எங்களிடம் பணத்தை மோசடி செய்த 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story