பொங்கலூர் அருகே, லாரி-கார் மோதல் - 2 பேர் காயம்


பொங்கலூர் அருகே, லாரி-கார் மோதல் - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 11 April 2019 3:38 AM IST (Updated: 11 April 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

பொங்கலூர்,

கரூரில் இருந்து எம்.சேண்ட் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பொங்கலூர் அருகே தனியார் நூற்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி வந்த கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் பக்கவாட்டில் கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதனால் காரில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் விபத்தின்போது நிலைதடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தனர். பின்னர் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் லாரி மற்றும் கார் ஆகியவற்றை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி சாலையின் ஓரத்தில் நகர்த்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த வழியாக வாகனங்கள் தங்கு தடையின்றி சென்றது.

இந்த விபத்து நடைபெற்ற அதே பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கு முன்னதாக 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆனால் அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துகள் குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்துகள் குறித்து பொதுமக்கள் கூறும்போது “ கோவை-திருச்சி சாலையில் தினமும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதே விபத்துக்கு காரணம்” என்றனர்.

Next Story