ஏரல் அருகே பிணமாக கிடந்தவர்கள் அடையாளம் தெரிந்தது, தம்பதி விஷம் குடித்து தற்கொலை - திருமணத்திற்கு மகள் மறுத்ததால் பரிதாபம்
ஏரல் அருகே பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி என்று தெரியவந்துள்ளது. மகள் திருமணத்திற்கு மறுத்ததால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்டு குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஆண், பெண் பிணங்கள் கிடந்தன. இறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.
இதுகுறித்து உமரிக்காடு கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சென்றனர். பின்னர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா குங்காருபாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 66), அவருடைய மனைவி பாலாமணி (55) என்பது தெரியவந்தது.
விவசாயியான சிவசுப்பிரமணியனுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் பேசியதாக தெரிகிறது. ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த சிவசுப்பிரமணியன், பாலாமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று விட்டனர். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மகள் வீட்டில் தனது பெற்றோர்கள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் காங்கேயம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
காங்கேயம் போலீசார் சிவசுப்பிரமணியனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இருப்பிடத்தை அறிய முயன்றனர்.
அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காங்கேயம் போலீசார், ஆத்தூர் போலீஸ் நிலையம் வந்து, காணாமல் போன கணவன்-மனைவி புகைப்படத்தை கொடுத்துவிட்டு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் உமரிக்காடு காட்டுப்பகுதியில் ஆற்றங்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மகள் மறுத்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story