கடலூர் பகுதி, வாக்குச்சாவடிகளில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் ஆய்வு
கடலூர் பகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் ஆய்வு மேற் கொண்டார்.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 1,499 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான சிறப்பு பார்வையாளர் சந்திரமோகன் நேற்று மதியம் கடலூர் வந்தார். அவரை கலெக்டர் அன்புசெல்வன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் கடலூர் புதுப்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை சிறப்பு பார்வையாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சாய்தளம், கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை சந்திரமோகன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி முதல்வர் அறையின் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி அமைத்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்புசெல்வன், வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டரு மான சரயூ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், தாசில்தார் செல்வகுமார், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) அரவிந்த்ஜோதி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story