சென்னை கொளத்தூரில் துணிகரம்: தேர்தல் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை


சென்னை கொளத்தூரில் துணிகரம்: தேர்தல் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 12 April 2019 4:30 AM IST (Updated: 11 April 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கொளத்தூரில், தேர்தல் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி அல்லிதாமரை(வயது 56). இவர், வேலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக இருந்து வருகிறார்.

தற்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது வீட்டின் மாடியில் இவர் தனியாக வசித்து வருகிறார். தரை தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார்.

கடந்த 2-ந் தேதி அல்லிதாமரை, வீட்டை பூட்டிக்கொண்டு தேர்தல் பணிக்காக சோழிங்கநல்லூர் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை மாடியில் உள்ள அல்லிதாமரையின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள், இதுபற்றி அவருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 110 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து கொளத்தூர் போலீசில் அல்லிதாமரை புகார் செய்தார். அதன்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story