விபத்தில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பதால் ஓட்டுப்போடுவதற்கு ‘ஸ்டிரெச்சர்’ அனுப்ப வேண்டும்


விபத்தில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பதால் ஓட்டுப்போடுவதற்கு ‘ஸ்டிரெச்சர்’ அனுப்ப வேண்டும்
x
தினத்தந்தி 12 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக கிடப்பதால் ஓட்டுப்போடுவதற்கு ‘ஸ்டிரெச்சர்’ அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோவை வாக்காளரின் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட தேர்தல் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கோவை மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் பிரிவு நடத்தி வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் உள்ளனர். தேர்தல் பிரசாரமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட சக்கர நாற்காலி, வாக்குச்சாவடியில் சாய்வு தள வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கோவை வெங்கிட்டாபுரம், அண்ணாவீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது55). இவர் விபத்தில் பாதிக்கப்பட்டு கை, கால்களை நீட்ட முடியாமல் படுத்தபடுக்கையாக உள்ளார்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட வேண்டும் என்பதில் ராஜேந்திரன் மிகவும் ஆர்வமாக உள்ளார். இதனால் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட ‘ஸ்டிரெச்சர்’ அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு போன் மூலம் தெரிவித் தார்.

இதுகுறித்து தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜாமணியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ராஜேந்திரனின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி தங்கமணி, ராஜேந்திரனின் வாக்காளர் அடையாள அட்டையை வாட்ஸ்அப் மூலம் பெற்றார். பின்னர் அவரது கோரிக்கை குறித்து கேட்டு அதனை நிறைவேற்றி வைப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் அவர் ஓட்டுப்போடும் வாக்குச்சாவடி விவரங்களும் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல அதிகாரி தங்கமணி கூறும்போது, ‘விபத்தில் பாதிக்கப்பட்டு கை,கால்களை மடக்க முடியாமல் நீட்டியபடி இருப்பதால், ஸ்டிரெச்சர்(படுக்கை வசதி) பொருத்தப்பட்ட வாகனத்தை ராஜேந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைத்து, அவரை பத்திரமாக அதில் ஏற்றி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட உதவி செய்யப்படும்.

அவர் எந்த நேரத்தில் தன்னை வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறுகிறாரோ அந்த நேரத்தில் வாகனத்தை அனுப்பி அழைத்து வரப்படுவார். ஓட்டுப்போட்ட பின்னர் மீண்டும் பத்திரமாக அவரை வீட்டில் வாகனத்தில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட வாக்காளரின் ஓட்டுப்போடும் ஆர்வத்தை மாவட்ட தேர்தல் பிரிவு நிறைவேற்ற இருப்பது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story