பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணனின் நெருங்கிய நண்பரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை - மேலும் பலர் சிக்குகிறார்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணனின் நெருங்கிய நண்பரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலர் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது.
கோவை,
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த 19 வயது மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணனும், பாலியல் வழக்கில் சேர்க்கப்பட்டார். அவரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடந்தது.
இதில், மாணவிகளை மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோ வலைதளத்தில் வெளியானது எப்படி? திருநாவுக்கரசுவுக்கும், மணிவண்ணனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் சில பதில்களை தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், திருநாவுக்கரசு வின் நண்பர்கள் யார் யார்? தற்போது அவர்கள் எங்கு உள்ளனர்? அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் துருவி துருவி விசாரணை செய்தனர். அவர் கூறிய பதிலை தொடர்ந்து மேலும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தது தெரிந்ததும், திருநாவுக்கரசு தலைமறைவாகிவிட்டார். அதற்கு அடுத்த நாள் அந்த மாணவியின் அண்ணனை தாக்கிவிட்டு மணிவண்ணனும் தலைமறைவாகி இருந்தார். அதை வைத்து பார்த்தபோதுதான், மணிவண்ணன், திருநாவுக்கரசுவின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது.
மேலும் மணிவண்ணனிடம் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு மாணவிகள், இளம்பெண்களை அழைத்துச்சென்றதில் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்தோம். இதையடுத்து அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த வீடியோக்கள் அடங்கிய செல்போனை அவரிடம் கேட்டபோது, தான் தலைமறைவானபோது, வீட்டில் வைத்துவிட்டு சென்றதாக கூறினார். அதன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த செல்போன் கிடைக்கவில்லை. அதை கைப்பற்றும் வகையில், அந்த செல்போனை தேடி வருகிறோம்.
போலீசில் புகார் தெரிவித்த மாணவியின் அண்ணனை தாக்கிய சம்பவத்தில் மணிவண்ணன், அவருடைய நெருங்கிய நண்பர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் கைதான 4 பேர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதில் மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எனவே அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. யார், யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு உள்ளதோ, அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story