பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சில் கடத்திய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சில் கடத்திய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 April 2019 10:45 PM GMT (Updated: 11 April 2019 6:13 PM GMT)

பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரைசாமி தலைமையிலான குழுவினர் நேற்று ரோடுமாமானந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த பஸ்சில் இருந்த 6 சாக்கு மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் பண்டல், பண்டலாக புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பறக்கும் படையினர் பஸ்சில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சங்கராபுரம் அருகே உள்ள அரியலூரை சேர்ந்த பஸ் டிரைவர் சரவணன், தேவபாண்டலத்தை சேர்ந்த கண்டக்டர் கோவிந்தசாமி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் கள்ளக்குறிச்சிக்கு அந்த சாக்கு மூட்டைகளை ஏற்றி அனுப்பியதும், அதில் என்ன பொருள் இருந்தது என்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனர். மேலும் அந்த நபர் குறித்த விவரம் தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை அனுப்பியது யார்? அதனை யாருக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story