மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான ஆட்சி தொடர வேண்டும் சரத்குமார் பேச்சு
மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று இரவில் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தனித்தனியாக பிரிந்து கிடந்த அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்தவர் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆனால் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் தவறான கொள்கையால் காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் தீரவில்லை.
அதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவை இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார். அப்போது தி.மு.க. அதனை எதிர்க்கவில்லை. இதனால் மீனவர்களின் துயரம் இன்னும் தீரவில்லை.
கடந்தமுறை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என்று தினமும் ஒரு ஊழல் வெளிவந்து நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த ஊழல் முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான நிலையான ஆட்சி தொடர வேண்டும். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story