தூத்துக்குடி தொகுதியில் 694 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி தொகுதியில் 694 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி நடந்தது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் துக்கி சயாம் பேயிக் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,595 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 236 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 3 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நமது மாவட்டத்தில் உள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண் பார்வையாளர்கள் பணியாற்றுவார்கள். நுண் பார்வையாளர்களின் பணிகள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. நுண் பார்வையாளர்கள் நேரடியாக பொது பார்வையாளர்கள் கட்டுப்பாட்டில் பணியாற்றுவார்கள்.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்தினம் அல்லது வாக்குப்பதிவு நாளில் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவுகள் தொடக்கத்துக்கு முன்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டும். வாக்குச்சீட்டு கருவி, கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்யும்போது வாக்குச்சீட்டு கருவியில் உள்ள அனைத்து பொத்தான்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை நீங்கள் உடனிருந்து கண்காணிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று சரியாக காலை 6 மணிக்கு கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள தேர்தலில் 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதனை நீங்கள் அனைவரும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு யாரும் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை அலுவலர்கள், கட்சி முகவர்கள் மீறாத வகையில் பார்த்துகொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம் நமது மாவட்டத்தில் உள்ள பதற்றமான, மிகவும் பதற்றமான மற்றும் முக்கியமான சுமார் 694 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் தேர்தல் பணிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் சம்பவங்களை உடனடியாக பொது பார்வையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், தேர்தல் தனி தாசில்தார் நம்பிராஜன் மற்றும் நுண் பார்வையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story